
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் பந்துவீச்சில் அபாரமான செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குர்னால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். அதன்படி இப்போட்டியில் அவர் நான்கு ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் 2017 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய குர்னால் பாண்டியா ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆர்சிபி அணிக்காக இரண்டாவது வெற்றிகரமான பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார்.