
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்களில் சுருண்டது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அவர்களை தவிர்த்து ஹார்டிக் பாண்டியா, ஷர்துல் தாகூர், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மூன்று ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 2 மெய்டன் ஓவர்களை வீசியது மட்டுமின்றி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.