ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி2 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதில், டர்பனில் நடக்க இருந்த முதல் டி20 போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதில் 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், தான் தொடரை, வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று இரவு ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்தது.
Trending
இதில், தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்த நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஐடன் மார்க்ரம் இருவரும் கொப்பையை இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இந்தப் போட்டியில் டேவிட் மில்லர் விக்கெட் எடுத்ததன் மூலமாக டி20 போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதோடு, தனது 29ஆவது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி எந்த பந்து வீச்சாளரும் செய்யாத உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ் வீசிய 2.5 ஓவர்களில் கடைசி 7 பந்தில் மட்டுமே 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 17 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலர் என்ற உலக சாதனையை இந்திய பவுலர் குல்தீப் யாதவ் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் தனது பிறந்தநாளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இந்த சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். இதே போன்று கடந்த 2018 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now