
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2ஆவது சூப்பர் 4 போட்டியில் இலங்கை வென்றது. 3ஆவது போட்டி கடந்த 10 ஆம் தேதி நடந்தது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியானது மழையால் ரிசர்வ் டேக்கு மாற்றப்பட்டது.
அதன்படி 11ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டது. இதில், முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழல் மன்னன் குல்தீப் யாதவ் ஃபஹர் ஜமான், அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4 ஆவது சூப்பர் 4 போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.