
தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 9 ரன்னில் தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸியும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
பின் 16 ரன்களை எடுத்த கையோடு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாமும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 54 ரன்னிலேயே 4 விக்கெட்டுக்ளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் டெம்பா பவுமாவுடன் இணைந்த கைல் வெர்ரையன் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.