
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது.
அதைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இத்தொடரின் முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற நிலையில், கடைசி இரண்டு போட்டி வெஸ்ட் இண்டீஸில் அல்லாமல் பக்கத்தில் உள்ள அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 2 கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து நடத்துவதற்கான உரிமையை பெற்றுள்ளன.