
இந்திய மகளிர் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் சுனே லூஸ் 65 ரன்களையும், மரிஸான் கேப் 74 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக அந்த அணி 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் ஃபலோ ஆனை தவிர்க்க தவறிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 337 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இதில் போஷ்க் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அதன்பின் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - சுனே லூஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.