
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியையும் லாரா வோல்வார்ட் வழிநடத்தவுள்ளார்.
மேலும் இந்த அணியில் சோலே டிரையான் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடிவரும் மரிஸான் கேப், தஸ்மின் பிரிட்ஸ், அன்னே போஷ்க், நதின் டி கிளார்க், சுனே லூஸ், அயபொங்கா காகா உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.