
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் மிட்செல் மார்ஷ் 60 ரன்களிலும், ஐடன் மார்க்ரம் 53 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார். மேற்கொண்டு அதிரடியாக விளையாடிய ஆயூஷ் பதோனியும் 30 ரன்களில் நடையைக் கட்டினார்.
இறுதியில் டேவிட் மில்லர் 27 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 203 ரன்களைக் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், அஷ்வானி குமார் மற்றும் விக்னேஷ் புதூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.