இதுபோன்ற போட்டிகளால் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
ஜாக் ஃபிரேசர் மெக்குர்கின் ஆட்டத்தை பார்க்கும் போது இளைஞர்களுக்கு அச்சமில்லை என்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 84 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களையும், ஷாய் ஹோப் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சோபிக்க தவறினர் அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 46 ரன்களையும், தில் வர்மா 63 ரன்கள் சேர்த்த நிலையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “சமீப காலங்களில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நெருக்கமான போட்டிகளாக அமைந்து வருகிறது. அதிலும் முன்பெல்லாம் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் போட்டியின் முடிவை மாற்ற வித்தியாசமாக இருந்த நிலையில், அது தற்போது இரண்டு, மூன்று பந்துகள் வித்தியாசத்தில் முடிவுகளை மாற்றி விடுகிறது. இதுபோன்ற போட்டிகளால் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தத்துடன் இருக்கின்றனர்.
இந்த போட்டியை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் நான் சில சிக்சர்களை அடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அக்ஸர் படேல் பந்துவீச்சில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்திருக்க வேண்டும். ஆனால் விழிப்புடன் இல்லாமல் இருந்துவிட்டோம். அதேபோல் டெல்லி அணியின் இளம் வீரர் ஃப்ரேசர் மெக்கர்க் பேட்டிங் செய்த விதம் ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் அவர் ஃபீல்ட் செட்டிற்கு ஏற்ப, கணக்கிட்டு தனது ஷாட்டுகளை விளையாட ரிஸ்க் எடுத்தார். இன்றைய போட்டியில் அவர் ஃபீல்டர்களுக்கு ஏற்றவகையில் தனது ஆட்டத்தை தொடர்ந்தார். அவரின் ஆட்டத்தை பார்க்கும் போது இளைஞர்களுக்கு அச்சமில்லை என்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. மேலும் இப்போட்டியில் நான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now