
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மணிப்பால் டைகர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எட்வர்ட்ஸ் - கௌதம் கம்பீர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கம்பீர் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து எட்வர்ட்ஸும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சிப்லி 16 ரன்களிலும், பாவெல் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த பீட்டர்சென் - பென் டங்க் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் பென் டங்க் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த பீட்டர்சென் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இஷுரு உதானா தனது பங்கிற்கு 26 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது.