எல்எல்சி 2023 குவாலிஃபையர் 1: டுவைன் ஸ்மித் மிரட்டல் சதம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் குவாலிஃபையர் ஆட்டத்தில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற விரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் - அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டுவைன் ஸ்மித் - மார்ட்டின் கப்தில் தொடக்கம் கொடுத்தனர். இதில் டுவைன் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் மார்ட்டின் கப்தில் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ரிக்கி கிளார்க் 34 ரன்களையும், கேப்டன் சுரேஷ் ரெய்னா 2 ரன்களுக்கும், குர்கீராட் சிங் 39 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
Trending
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டுவைன் ஸ்மித் சதமடித்து அசத்தினார். பின் 53 பந்துகளில் 14 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 120 ரன்களை எடுத்திருந்த டுவைன் ஸ்மித் விக்கெட்டை இழந்தார். இறுதில் ஆஸ்கர் ஆஃப்கான் 8 பந்துகளில் 23 ரன்களைச் சேர்த்து பினீஷிங் கொடுத்தார். இதன்மூலம் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை குவித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மணிப்பால் அணி வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். அதன்படி அந்த அணியின் கைல் கோட்சர் 15, சாத்விக் வால்டன் 10, காலின் டி கிராண்ட்ஹோம் 15, அமித் வர்மா 16, கேப்டன் முகமது கைஃப் 13 என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ பெரேரா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 73 ரன்களை விளாசிய ஏஞ்சலோ பெரேராவும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெரோம் டெய்லர், பீட்டர் ட்ரெகோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மணிப்பால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now