
லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் - அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜம்மூவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பில்வாரா அணியில் சோலமன் மிர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த லிண்டல் சிம்மன்ஸ் - திலகரத்னே தில்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிம்மன்ஸ் 21 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அப்துல்லா 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
பின் அரைசதம் கடந்து அதிரடி காட்டிய திலகரத்னே தில்சன் 53 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த யூசுஃப் பதான் 34 ரன்களையும், இர்ஃபான் பதான் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு உதவினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பில்வாரா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சுயால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.