
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 32ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் குயின்டன் டி காக் 114 ரன்களையும், மூன்றாவது வீரராக களமிறங்கிய வாண்டர் டுசன் 133 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா சார்பாக சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.