
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலைமையில் ஜூன் 28ஆம் தேதி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் மீண்டும் 325 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் 98 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதன் பின் 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்களை எடுத்தார்.
இறுதியில் 371 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிரௌலி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட்டுடன் இணைந்து நங்கூரமாக நின்று சரிவை சரி செய்ய போராடினார். அந்த வகையில் 5ஆவது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 83 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.