கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது - அனில் கும்ப்ளே!
எங்களுடைய காலத்தில் கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது என்ற வாசகம் இருந்தது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்படித்தான் நடைபெறுகின்றன என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான அதே சமயத்தில் எதிர்பார்ப்புகளை தூண்டும் ஒரு ஆண்டாக அமையவிருக்கிறது. காரணம் இந்த ஆண்டில் எல்லாம் சரியாக நடந்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து முறை மோதுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இது இந்திய ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும், மேலும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும்.
இந்தியாவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆசியக் கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணி செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தான் அணியை இலங்கையின் பல்லேகெலே மைதானத்தில் சந்திக்கிறது. இதே தொடரில் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், மூன்று முறை இந்த தொடரில் விளையாடும்.
Trending
மேலும் ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்றில் ஒரு முறையும், இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு அல்லது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இன்னொரு முறையும் மோதுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் காரணங்களால் பல ஆண்டுகளாக இரு அணிகளும் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் சுற்றுப்பயணம் செய்து விளையாடாமல் இருக்கின்ற காரணத்தினால், ஒரே வருடத்தில் ஐந்து முறை விளையாடுவதற்கு வாய்ப்பு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கட்டுகள் சாய்த்து சாதனை படைத்த அனில் கும்ப்ளே அன்றைய காலக்கட்டம் குறித்து பேசுகையில், “எங்களுடைய காலத்தில் கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது என்ற வாசகம் இருந்தது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்படித்தான் நடைபெறுகின்றன. இதை மற்றொரு போட்டியாக கருதுவது மிக மிக முக்கியம்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் 10 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கவில்லை. இது எந்த ஒரு பந்துவீச்சாளரின் கனவாக இருந்தாலும் கூட, அடுத்து அதே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வீழ்த்துவதற்கு முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். இதுதான் கிரிக்கெட் உங்களுக்கு இப்படித்தான் திருப்பி கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக இந்திய வீரர் ஷிகர் தவான் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமோ இல்லையோ, பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிவிட கூடாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now