
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பி லௌவ் கண்டி - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் - ஃபகர் ஸமான் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹாரிஸுடன் இணைந்த தினேஷ் சண்டிமலும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
பின் 41 ரன்களில் சண்டிமல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 79 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ஹாரிஸும் விக்கெட்டை இழந்தார்.