
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கலே அணிக்கு க்ரூஸ்புலே - ஷெவோன் டேனியல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் க்ரூஸ்புலே 36 ரன்களிலு, ஷெவோன் டேனியல் 49 ரன்களிலும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷாவும் 30 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்ஃபெர்ட் அரைசதம் கடதுடனது, 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை விளாசி 54 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கலே டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது.