
இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தம்புலா அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த குசால் மெண்டீஸ் - சமரவிக்ரமா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின் 59 ரன்கள் எடுத்த நிலையில் சமரவிக்ரமா ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டீஸ் 4 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 87 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தம்புலா ஆரா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைக் குவித்தது.