
இலங்கையில் நடைபெற்று வந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கலே மார்வெல்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிக்வெல்லா 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய ஜனித் லியானகே 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிம் செய்ஃபெர்ட் - பனுகா ராஜபக்ஷா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய டிம் செய்ஃபெர்ட் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபுறம் பனுகா ராஜபக்ஷா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனாலும் அடுத்து களமிறங்கிய சஹான் அர்ராச்சிகே 16 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் சிறப்பாக விளையாடி வந்த பனுகா ராஜபக்ஷா 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, கலே மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. ஜாஃப்னா கிங்ஸ் தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 3 விக்க்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.