
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐந்தாவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 34 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஏஞ்சலோ பெரேரா காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா, சமரவிக்ரமா, தனஞ்செயா, கருணரத்னே ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் அரைசதம் கடந்த நிலையில் கிளென் பிலிப்ஸும் 58 ரன்களோடு நடையைக் கட்ட, கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்தாலும் 188 ரன்களைக் குவித்தது.
ஜாஃப்னா கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 6 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ரைலீ ரூஸோவ் - அவிஷ்கா பெர்னாண்டோ இணை பொறுப்பான ஆட்ட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.