ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் 4 சீசன்களைக் கடந்த 5ஆவது சீசனில் காலடியெடுத்து வைத்துள்ளது. அந்தவகையில் இன்று தொடங்கிய 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து தம்புளா சிக்ஸர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தம்புலா சிக்ஸர்ஸ் அணிக்கு தனுஷ்கா குணத்திலகா - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனுஷ்கா குணத்திலகா 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த நுவநிந்து ஃபெர்னாண்டோ, தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 25 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த மார்க் சாப்மேன் மற்றும் சமிந்து விக்ரமசிங்கே இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரைசதங்களைப் பதிவுசெய்ய, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைக் கடந்தது.