ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது தற்சமயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று இரவு நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதிய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனால் அத்தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் குயின்டன் டி காக், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்களிடமிருந்து தொடர்ச்சியான ரன்கள் வராதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் மயங்க் யாதவ் கடந்த ஆட்டத்தில் மீண்டும் காயம்அடைந்தார். அநேகமாக அவர், எஞ்சிய போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம்தான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் மோஹ்சின் கான், யாஷ் தாக்கூர்,ரவி பிஷ்னோய் ஆகியோருடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், குர்னால் பாண்டியா ஆகியோரும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருவவது அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: கேஎல் ராகுல் (கே), ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மொஹ்சின் கான், மயங்க் யாதவ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளின் முடிவில் 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த அணி மேற்கொண்டு ஒரு வெற்றியைப் பெற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவிடும் என்பதால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் பாதி வேலையை முடித்துவிடுகின்றனர்.
அவர்களைத்தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் ஆகியோருடன் கடந்த போட்டியில் மனீஷ் பாண்டேவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி ஆகியோர் சுழற்பந்துவீச்சிலும், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோருடன் ஆண்ட்ரே ரஸலும் வேகப்பந்துவீச்சில் கலக்கி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: பிலிப் சால்ட் , சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
Win Big, Make Your Cricket Tales Now