தனது அபாரமான பந்துவீச்சு குறித்து மனம் திறந்த மொஹ்சின் கான்!
இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என மொஹ்சின் கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 63ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் மும்பை அணியின் வெற்றிக்கு இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை லக்னோ அணிக்காக வீசிய மொஹ்சின் கான், வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 0, 1, 1, 0, 1, 2 என அந்த ஓவரில் அவர் ரன்களை கொடுத்திருந்தார். அதுவும் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் என இருவரும் ஸ்ட்ரைக்கில் இருந்த போது இதை அவர் செய்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் தனது அணியை பிளே ஆஃப் வாய்ப்புக்கு மிக அருகில் நெருங்க செய்துள்ளார் மொஹ்சின் கான். 24 வயதான அவர் கடந்த சீசனில் லக்னோ அணிக்காக ஜொலித்தார். இருந்தபோதும் ஓராண்டு காலம் இடது பக்க தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். இந்த சூழலில் மீண்டும் ஐபிஎல் களத்திற்கு அவர் திரும்பியுள்ளார்.
Trending
இந்நிலையில் இதுகுறித்து போட்டி முடிந்து பேசிய அவர், “இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 10 நாட்கள் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அப்பாவுக்காகத் தான் இதை செய்தேன். அவர் இந்த ஆட்டத்தை பார்த்திருப்பார்.
கடந்த போட்டியில் எனது செயல்பாடு சிறப்பாக இல்லை. இருந்தும் இந்த முக்கியமான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகம், கம்பீர் சார் மற்றும் விஜய் தஹியா சாருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் பயிற்சியின் போது செய்ததை ஆட்டத்திலும் செய்ய வேண்டும் என்பது தான் திட்டம். ரன் அப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக பந்து வீச முடிவு செய்தேன். கடைசி ஓவரின் போது ஸ்கோர் போர்டை பார்க்கவில்லை. அந்த ஓவரில் நான் பந்தை மெதுவாக வீசினேன். இரண்டு பந்துகளுக்கு பிறகு யார்க்கர் வீசினேன்” என மொஹ்சின் கான் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now