
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடிப்பதுடன், காகிசோ ரபாடாவின் சாதனையையும் சமன்செய்யவுள்ளார்.
அந்தவகையில் தென் அப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அந்த அணிக்காக 47 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லுங்கி என்கிடி இதுவரை 42 டி20 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை படைப்பார்.