
கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் மகாராஜா கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய குல்பர்கா அணியில் லுவ்னித் சிசோடியா ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் தேவ்தத் படிக்கல் 13 ரன்களிலும், ஷரத் 6 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லுவ்னித் சிசோடியா 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் பிரவீன் தூபே 26 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் குல்பர்கா அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு அணி தரப்பில் மொஹ்சின் கான், லவிஷ் கௌஷல், க்ராந்தி குமார் உள்ளிட்டோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எல்ஆர் சேத்தன் - கேப்டன் மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர்.