
கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் மஹாராஜா கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 26ஆவது லீக் போட்டியில் மைசூர் வாரியர்ஸ் - ஹுப்லி டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹுப்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணிக்கு எஸ்யூ கார்த்திக் - சிஏ கார்த்திக் இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எஸ்யூ கார்த்திக் 29 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் சிஏ கார்த்திக் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் கருண் நாயர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார்.
ஆனால் மறுபக்கம் விளையாடிய சுமித் குமார் 5 ரன்களிலும், ஹர்ஷி தர்மானி 15 ரன்களிலும், சுஜித் 20 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கருண் நாயர் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது.