
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் வில் யங் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் மார்க் சாப்மேன் விக்கெட்டை இழந்தார்.
மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திராவும் 79 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் 38 ரன்களையும், கிளென் பிலீப் 22 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 20 ரன்களையும் சேர்த்தனர். இதனால், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.