விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களைச் சேர்த்தார். சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரமந்தீப் சிங் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வந்தார். அப்போது சிஎஸ்கே அணி தரப்பில் இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை மஹீஷ் தீக்ஷனா வீசினார். அந்த ஓவரில் 4ஆவது பந்தை ரமந்தீப் சிங் இமாலய சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டு சிஸ்கே அணிக்கு சற்று அழுத்தத்தை ஏற்படுத்தினார்.