
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சீசனாக அமைந்தது. 10 அணிகள் பங்குபெற்ற கடந்த சீசனில் ஒன்பதாவது இடத்தையே புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிடிக்க முடிந்தது. இதனால் இந்த ஆண்டு மினி ஏலத்தில் அணியை மாற்றி கட்ட வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு இருந்தது. இதனால் மூத்த வீரர்களான பிராவோ மற்றும் உத்தப்பா ஆகியோரை கழட்டிவிட்டு புதிய அணியை கட்ட தீர்மானித்தது.
அதன்படி மினி ஏலத்தில் 16.25 கோடிக்கு போய் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். இவரது அனுபவம் மற்றும் பேட்டிங் பந்துவீச்சு சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் முழங்காலில் இருக்கும் காயத்தின் பிரச்சினையால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பந்து வீசுவது சந்தேகம் என்று தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இவர் பந்து வீசாவிட்டால் சென்னை மைதானத்தில் விளையாடும் போட்டிகளில் ஒரு கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவது கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் லக்னோ அணிக்கு எதிரான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பவர் பிளேவில் ஒரு ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியை தந்தது.