
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 164 /5 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் 165 /3 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.
இந்த வெற்றிக்காக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த போதும், ரோஹித் சர்மாவின் காயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதிரடியாக ஆடினார். ஆனால் ஆட்டத்தின் 3ஆவது ஓவரில் திடீரென அவரால் களத்தில் சரியாக நிற்க முடியாமல் தவித்தார். இதனையடுத்து அங்கு விரைந்த பிசியோதெரபிஸ்டுகள் நீண்ட நேரமாக அவரை பரிசோதித்தனர்.
இதன்பின்னர் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது எனக்கூறி பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதுகுறித்து உடனடியாக தகவல் வெளியிட்ட பிசிசிஐ, ரோஹித் சர்மாவுக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டிருப்பதாகவும், உள்ளே எந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.