
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் நாளை விளையாடி, நாளை மறுநாள் 28ஆம் தேதி உலகக்கோப்பை இறுதி அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இன்று இலங்கை அணி தன்னுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை சற்றுமுன் வெளியிட்டு இருக்கிறது. கடந்த வாரத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் பெரிய பூகம்பங்களை உருவாக்கியது.
பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் படுதோல்விகளை சந்தித்து வெளியேறியது அந்த அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து இருக்கிறது. இதேபோல் இலங்கை அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 50 ரன்கள் சுருண்டு படுதோல்வி அடைந்தது, அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய விமர்சனத்தை உருவாக்கியது. இதன் காரணமாக கேப்டன் தசுன் ஷனகாவை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று, பலத்த குரல்கள் எழுந்தது.