வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று முடிந்திருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரை, 44 வயதான தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதல்முறையாக வென்று இருக்கிறது. இம்ரான் தாஹிர் ஓய்வு பெற்று உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் சில வீரர்களுக்கு மட்டும்தான் வயது ஒரு பிரச்சினையாகவே இருந்தது கிடையாது.
இவர் மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டங்கள் வென்ற காலக்கட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். இவர் வெளிநாட்டு வீரர் என்பதால் ஒரு கட்டத்தில் அணிக் கலவையில் சிரமங்கள் உருவானதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவில்லை.
ஆனால் இவரது திறமை குறைந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது. அற்புதமான லெக் பின்னரான இவரால் ஆட்டத்தில் எந்த நேரத்திலும் திருப்புமுனையை கொண்டு வர முடியும். இதையெல்லாம் தாண்டி 44 வயதில் கரீபியன் பிரிமியர் டி20 லீக் போன்ற பெரிய தொடரில் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பது மிகப்பெரிய விஷயம். இது குறித்து உணர்ச்சி பொங்க பேசியுள்ள இம்ரான் தாஹிர் அனலைஸ்ட் பிரசன்னா மற்றும் அஸ்வின் இருவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.