முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி எதிர்வரும் இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
Trending
இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய மகளிர் அணிக்கு இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் முக்கியமானதாக கருதபடுகிறது.
இந்த முத்தரப்பு தொடருக்கு முன்னதாக பயிற்சி முகாமுக்கான 20 பேர் கொண்ட அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கேட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 முதல் 14 வரை நடைபெறும் ஒரு வார கால பயிற்சி முகாமில், விக்கெட் கீப்பர்-பேட்டர் கரபோ மெசோ, ஆல்ரவுண்டர் மியான் ஸ்மித் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சேஷ்னி நாயுடு ஆகிய மூன்று அறிமுக வீராங்கனைகளுக்கு தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் மரிசேன் கேப் இந்த பயிற்சி முகாமில் இருந்தும், இலங்கையில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு தொடரிலிருந்தும் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அணியின் கேப்டனாக லாரா வோல்வார்ட் தொடர்கிறார். மேற்கொண்டு அன்னேஷ் போஷ், டஸ்மின் பிரிட்ஸ், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், நதின் டி கிளார்க் என நட்சத்திர வீராங்கனைகாள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கே), அன்னேக் போஷ், டஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளெர்க், அன்னேரி டெர்க்சன், லாரா குடால், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜாஃப்டா, அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மாரி மார்க்ஸ், கரபோ மெசோ, நோன்குலுலேகோ மலாபா, செஷ்னி நாயுடு, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, மியான் ஸ்மிட், க்ளோ ட்ரையன், ஃபே டன்னிக்லிஃப்.
Also Read: Funding To Save Test Cricket
மகளிர் ஒருநாள் முத்தரப்பு தொடர் அட்டவணை:
- ஏப்ரல் 27 - இலங்கை vs இந்தியா
- ஏப்ரல் 29 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
- மே 1 - இலங்கை vs தென் ஆப்பிரிக்கா
- மே 4 - இலங்கை vs இந்தியா
- மே 6 - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
- மே 8 - இலங்கை vs தென்ஆப்பிரிக்கா
- மே 11- இறுதிப்போட்டி
Win Big, Make Your Cricket Tales Now