
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாராவோல்வார்ட் ரன்கள் ஏதுமின்றியும், தஸ்மின் பிரிட்ஸ் 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த போஷ் - சுனே லூஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சுனே லூஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போஷ் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மரிஸான் கேப் - சோலே ட்ரையான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவெ உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மரிஸான் கேப் அரைசதம் கடந்ததுடன் 75 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகன் ஷட், ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.