
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்ற்து. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அதிரடியாக தொடங்கிய டிம் செஃபெர்டும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய டேரில் மிட்செல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 3 ரன்னிலும், மிட்செல் ஹெய் 9 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த மார்க் சாப்மேன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 94 ரன்களைச் சேர்த்திருந்த நிலைய்ல் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய கைல் ஜேமிசன், மிட்செல் ஹெய் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.