
ஐபிஎல் லீக் சுற்றுகள் கடைசி நாள் கடைசி லீக் போட்டி மற்றும் கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பில் முடிந்தது. பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் தேர்வாகியது. அதன் பிறகு சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் தகுதி பெற்றன. கடைசியாக ஆர்சிபி அணியின் வெற்றி தோல்வியை சார்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது.
வருகிற 23ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன அதன் பிறகு எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
ராகுல் இல்லாத சூழலில் லக்னோ அணிக்கு குர்னால் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு லக்னோ அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கும் எடுத்துச் சென்றுள்ளார். பரபரப்பாக நடந்த கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி லக்னோ அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.