
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஐடன் மார்க்ரம் மற்றும் காகிசோ ரபாடா ஆகியோரும், வங்கதேச டெஸ்ட் தொடரை இலங்கை அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பதும் நிஷங்கா ஆகியோரது பெயரும் இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஐடன் மார்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் 136 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அவர் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். மறுபக்கம் காகிசோ ரபாடா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் முதல் இன்னிங்ஸின் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் என மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.