
இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அந்த உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று பார்க்கப்பட்ட வேளையில் நியூசிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இருந்தது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்களை குவித்து இருந்தது. பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்த வேளையில் இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் ரிஷப் பந்த் ஓரளவு சுதாரித்து 32 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க 22 ஓவர்களில் இந்திய அணி 71 ரன்களை மட்டுமே குவித்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்நேரத்தில் பாண்டியாவும் 32 ரன்களில் வெளியேற இந்திய அணி 92 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த தோனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.