
இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் மாயங்க் அகர்வால் தனது டெஸ்ட் கெரியரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்.
அதோடு மும்பை டெஸ்டுக்கு முன்னர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் அவர் ஒருமுறை கூட 50+ ரன்களை கடக்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 150+ ரன்களை அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்திய அணி இந்த போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைய அவரது ரன் குவிப்பும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் ஓய்வில் இருந்த வேளையில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா செல்லும் சுற்றுப்பயணத்திலும் இடம் பிடித்துள்ளார்.