
வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரை இழந்த இந்தியா கடைசி கிரிக்கெட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய ஆறுதல் வெற்றியை சுவைப்பதற்கு 210 (126) ரன்கள் விளாசிய இஷான் கிஷான் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர், அதிவேகமாக சதமடித்த வீரர் ஆகிய 2 புதிய உலக சாதனைகளையும் அவர் படைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரை 2022 ஐபிஎல் தொடரில் 15 கோடி என்ற பெரிய தொகைக்கு மும்பை நிர்வாகம் தக்க வைத்தது. ஆனால் அதிகப்படியான விலையால் எப்படியாவது சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளான அவர் பார்மை இழந்து ரன்கள் குவிக்க முடியாமல் திண்டாடினார்.
இருப்பினும் இந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். குறிப்பாக சமீப காலங்களில் தடவலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்த இந்திய வீரர்களுக்கு மத்தியில் 40 ஓவர்களுக்குள் அவுட்டாகாமல் கடைசி வரை நின்று விளையாடிருந்தால் 300 ரன்களை அடித்திருக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மிகுந்த அதிரடி வீரராக இஷான் கிஷான் திகழ்கிறார்.