
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி அலிசா ஹீலி மற்றும் எல்லிஸ் பேர்ரி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 30 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் அதிகபட்சமாகவே அமெலியா கெர் 29 ரன்களையும், சூஸி பேட்ஸ் 20 ரன்களையும் சேர்த்தது தான். மேற்கொண்டு நட்சத்திர வீராங்கனைகள் கேப்டன் சோஃபி டிவைன், மேடி கிரீன், இசபெல்லா காஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.