
உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கௌரவாமாக கருதி வெற்றிக்காக ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் வரலாற்றில் இதுவரை சந்தித்த 7 உலகக்கோப்பை போட்டிகளிலும் வென்றதை போல் இம்முறையும் சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி காலம் காலமாக வைத்துள்ள கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் இருக்கிறது. மறுபுறம் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை 1992 முதல் கடந்த 30 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழிக்கு பழி தீர்த்து வரலாற்றை மாற்ற வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
இருப்பினும் இவ்விரு அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தானை விட இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழ்கிறது. அதனால் 8ஆவது முறையாக இப்போட்டியிலும் வென்று இந்தியா தங்களுடைய வெற்றி பாதையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாதனைகள் என்றால் ஒருநாள் உடைப்பதற்காக படைக்கப்படுவதாக தெரிவிக்கும் பாபர் ஆசாம் 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி, 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்ததை போல் இம்முறை வரலாற்றை மாற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.