
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் தீபக் சஹர் கடந்த ஆண்டு முழுவதும் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். ஓரிரு போட்டிகள் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் இவர் விளையாடவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். ஆசியகோப்பை முடிந்தபின் நடந்த போட்டிகளில் மீண்டும் விளையாடினார். பும்ரா இல்லாததால் டி20 உலககோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது மீண்டும் காயம் ஏற்பட்டு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்கு திரும்பிய தீபக் சஹர் மூன்றாம் நிலை ஜவ்வு கிழிந்து கிரிக்கெட்டில் இருந்து மீண்டும் சில காலம் வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டார்.
இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல், ஆசியகோப்பை, டி20 உலககோப்பை என மிகப்பெரிய தொடர்கள் எதிலும் இவர் விளையாட முடியவில்லை. அதிலிருந்து குணமடைந்து இந்த சீசன் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் பந்துவீசுவதற்கு வந்திருக்கிறார்.இந்த சீசனின் முதல் போட்டியில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.