
16ஆவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நாளை சென்னையில் தொடங்க உள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ அணிகள் எளிதாக முன்னேறிய நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அபார வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து கடைசி லீக் போட்டியான குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் பெங்களூரு அணி களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது.