
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ள காரணத்தால், இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலிலாவது முன்னேற்றமடைய முயற்சிக்கும். இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி மூன்று வெற்றி, எட்டு தோல்விகளைச் சந்தித்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதிலும் அந்த அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்த அணியின் பிளே ஆஃப் கனவும் தகர்ந்துள்ளதுடன், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வேளியேறிய முதல் அணி எனும் மோசமான சாதனையையும் படைத்துள்ளது.