
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்த முறை அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் ஆரம்பத்தில் குஜராத் அணியில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு முதல் ஆட்டத்தில் விளையாடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங் செய்யும் பொழுது கால் மூட்டில் காயமடைந்து வெளியேறினார்.
பிறகு அந்தக் காயம் மோசமாக இருக்கவே தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடாமல் நாடு திரும்பினார். அவருடைய காயத்திற்கு ஆறு மாதங்கள் ஓய்வு தேவைப்படுகின்ற நிலையில், அவர் இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரவில்லை.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் உள்நாட்டு கிரிக்கெட்டின் போது குதிகாலில் காயமடைந்து, தற்பொழுது உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வந்திருக்கிறது.