‘டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது’ - மைக்கேல் ஹோல்டிங் விளாசல்!
டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் மிகக்கடுமையாக விளாசியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் ஆரம்பக்கட்டத்தில் ஆடப்பட்டுவந்தது. அதன்பின்னர் ஒரே நாளில் முடியக்கூடிய ஒருநாள் போட்டிகள் வந்தன. கிரிக்கெட் பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், 3 மணி நேரத்தில் முடிவு தெரியக்கூடிய டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
டி20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்கள் ஆர்வம் குறைந்து. டெஸ்ட் கிரிக்கெட் நலிவடைந்துவருகிறது என்பது 1970-80களில் ஆடிய கிரிக்கெட் வீரர்களின் கருத்து. அதனால் அவர்களில் பெரும்பாலானோர் டி20 கிரிக்கெட்டை ரசிப்பதில்லை.
Trending
டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு, டி20 கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்திவிட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டை கோட்டை விட்ட அணிகளில் முக்கியமானது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நலிவடைந்ததற்கு டி20 கிரிக்கெட்டே காரணம் என்ற பார்வையில், டி20 கிரிக்கெட் மீது கடும் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் உள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் டி20 ஃபார்மட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மைக்கேல் ஹோல்டிங், “டி20 கிரிக்கெட்டில் ஜெயித்தாலும் அது வெற்றியே இல்லை. டி20 ஃபார்மட் கிரிக்கெட்டே இல்லை. டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் நலிவடைந்தது.
டி20 தொடர்கள் உலகம் முழுதும் நடத்தப்படுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை போல வீரர்களுக்கு அதிக ஊதியம் வழங்கமுடியாத நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்தால், அந்த தொடர்களுக்கு சென்று ஆடாமல் என்ன செய்வார்கள்? அதனால் நான் வீரர்களை குறைகூறவில்லை.
கிரிக்கெட் நிர்வாகங்களைத்தான் குறைகூறுகிறேன். டி20 தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்கலாம். அது கிரிக்கெட்டே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதனால்தான் வெஸ்ட் இண்டீஸ் கோட்டைவிட்டுவிட்டது” என்று கடுமையாக விளாசியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now