
இந்திய அணி இம்மாத தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இரண்டாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபாத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர்த்து காயம் காரணமாக ஷிவம் தூபே, மயங்க் யாதவ், ரியான் பராக் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கும் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.