
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் சொந்த மண்ணில் நடைபெற்ற லீக் சுற்றில் 9 போட்டிகளிலும் 9 வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்த இந்தியா வெற்றிவாகை சூடி இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இருப்பினும் உலகின் மற்ற அணிகளுக்கு எதிராக தடுமாறினாலும் கூட ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே நியூசிலாந்து அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 2000 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இதுவரை சந்தித்த 3 ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக 2019 உலகக்கோப்பை அரையிறுதி ஜடேஜா மற்றும் தோனி ஆகியோருடைய போராட்டத்தை தாண்டி இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களால் இன்னும் மறக்க முடியவில்லை. இருப்பினும் இதே உலகக்கோப்பையின் லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து நியூஸிலாந்தை ஐசிசி தொடரில் இந்தியா தோற்கடித்தது போல் நிச்சயம் இறுதிப்போட்டி அரையிறுதி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.